‘லைக்கா ஞானம்’ கிராமத்தின் புதிய பெயர் பலகையை அகற்றுவதற்கு ஏகமனதாக முடிவு

வவுனியா வடக்கில் சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களை குடியமர்த்துவதற்காக உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்ட பகுதி கிராமத்தின் பெயரை லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பெயர் மாற்றி அமைக்கப்பட்ட வீதிப் பலகைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கூட்டத்திற்கு வந்திருந்த அப்பகுதி உத்தியோகத்தர் ஒருவர்,

“இராசபுரம் எனும் தமிழ் மக்களின் பூர்வீக கிராமத்தின் பெயர் லைக்கா ஞானம் கிராமம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மக்களை மீள்குடியேற்றுவதற்காக வீட்டுத்திட்டம் வழங்குவது நல்ல விடயமாக இருக்கின்ற போதும் ஒரு பாரம்பரிய பழமையான கிராமத்தின் பெயரான “இராசபுரம்” என்பதை மறைத்து “லைக்கா ஞானம் கிராமம்” என மாற்றுவது எமது வரலாற்றை மாற்றுவதாக அமைந்து விடும் என ஒருங்கிணைப்புக் குழுவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

இதன்போது பதிலளித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

“புராதன கிராமங்களின் பெயர்கள் அந்த கிராமங்களின் அடையாளங்களாகவும், ஏதோ ஒருவகையில் அந்த கிராமத்தவர்களுடன் தொடர்புபட்டதாகவும் அமைந்துள்ளது.

அந்த அடையாளங்களை நாம் மாற்ற முடியாது. அது தொடர்பில் உடனடியாக பிரதேசசபை கவனம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதனை வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் வலியுறுத்தினார். இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தானும் ஆதரவு வழங்கினார்.

இதனையடுத்து பதிலளித்த வவுனியா வடக்கு பிரதேசசபைச் செயலாளர் க.சத்தியசீலன்,

கிராமத்தின் பெயரை மாற்றி வீதிப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் எம்மிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை.

இந்த நிலையில் கூட்டத்தில் நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தால் அதனை நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த கிராமத்தின் பெயரை மாற்ற முடியாது எனவும், அது இராசபுரம் கிராமம் என்றே தொடர்ந்தும் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், லைக்கா ஞானம் கிராமம் என்று புதிதாக பெயர் மாற்றி அமைக்கப்பட்ட வீதிப் பலகைகளை உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக்கூட்டத்திற்கு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுக்கு அழைப்பு விடப்படவில்லை என மக்களால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மட்டும் கூடிக்கதைக்கும் கூட்டமாக இது அமைந்திருக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப் பகுதிகளை அதிகம் கொண்ட இப்பகுதி மக்கள் தமது பிரச்சினைகள் குறித்து கதைக்க முடியாதவிடத்து இந்த குழுக்கூட்டம் எதற்கு என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You might also like