மின்பாவனை பற்றுச்சீட்டுக்கள் எங்கே: கிளிநொச்சி மக்கள் ஆதங்கம்
கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் உள்ள மின்பாவனையாளர்களுக்கான மின்பாவனை பற்றுச்சீட்டுக்கள் பல மாதங்களாக கிடைக்கப்பெறவில்லை என கிளிநொச்சி மாவட்ட பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக கிளிநொச்சி கணேசபுர கிராமத்திற்குரிய மின்பாவனைக்கட்டன பற்றுச் சீட்டுக்கள் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுவரை கிடைக்கப்பெறவில்லை என மின்பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட அலகிற்கு மேல் மின்பாவனை இடம்பெற்றால் அதற்குரிய மின்கட்டணம் அதிகரிக்கக் கூடும், இந்நிலையில் தமக்கான மின்பாவனை பற்றுச்சீட்டுக்கள் உரிய காலத்திற்குள் கிடைக்கப்பெறாமையால், தம்மால் மின்கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு கூடுதலான மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய அவல நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மின்சாரசபையினர் தங்களது கவனத்திற்கு எடுத்து மின்பாவனை பட்டியல்களை அந்தந்த மாத முடிவில் கிடைக்க வழிவகுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். .
இதே சமயம் கிளிநொச்சியில் இதுவரை மின்சாரக்கட்டணத்தை செலுத்த தவறியவர்களுக்கு மின் துண்டித்தல் தொடர்பான சிவப்பு அறிவித்தல் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.