சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 50 இலங்கை படையினர்

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையினருடன் இணைந்து ஹெய்டி நாட்டில் சேவையாற்றும் இலங்கை படையணியின் கட்டளை அதிகாரி உட்பட 134 படையினர் 9 சிறார்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உள்ளக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெய்டி நாட்டில் சேவையாற்றி வந்த 114 இலங்கை இராணுவத்தினர் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் எவருக்கும் சிறை தண்டனை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்து இராணுவத்திற்குள் விசாரணைகளை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஹெய்டியில் கடமையாற்றிய இராணுவப் படையின் கட்டளை அதிகாரியை பணி நீக்கம் செய்துள்ளதாகவும் 8 படையினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை ஹெய்டியில் கடமையாற்றிய 134 இலங்கை படையினருக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஹெய்டியில் கடந்த 12 ஆண்டுகளாக அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் மற்றும் ஏனைய ஊழியர்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டு உட்பட சுமார் இரண்டாயிரம் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்களில் 300க்கும் மேற்பட்டவை சிறார்களுடன் சம்பந்தப்பட்டவை. சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்களில் குறைந்தளவான நபர்களே சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கை இராணுவத்தினரில் எவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என்பதால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

12 வயதான சிறுமிகள் மற்றும் சிறுவர்களை இலங்கை இராணுவத்தினர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர் என ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட வயதான சிறுமியை அமைதிகாக்கும் படையினர் 50 பேர் பாலியல் வல்லறவுக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த சிறுமி பருவமடையாத நிலையிலேயே இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் தகவல் வழங்கியுள்ள 16 வயதான சிறுமி இலங்கை படையணிக்கு கட்டளை வழங்கும் அதிகாரி தன்னை மூன்று முறை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் விசாரணையின் போது சிறார்கள் சிங்கள மொழியில் ஒருவருடன் ஒருவர் கருத்து பரிமாறிக்கொண்டதாக ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு குழு கூறியுள்ளது.

பணம், பிஸ்கட், டொபி, சொக்லட் மற்றும் பழங்களுக்காக தாம் ஐ.நா அமைதிகாக்கும் படையினருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருந்தாக 14 வயதான சிறுமி கூறியுள்ளார்.

இதனை தவிர தாம் 100க்கும் மேற்பட்ட இலங்கை படையினருடன் பாலியல் தொடர்புகளை கொண்டிருந்ததாக 15 வயதான சிறுவன் ஐ.நா விசாரணையாளர்களிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் சிறுவர்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டு உண்மையானதா பொய்யானதா என்பதை உறுதிப்படுத்த தம்மிடம் விடயங்கள் எதுவுமில்லை என இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்ட பெரும்பாலான படையினர் இராணுவத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like