முல்லைத்தீவு வர்த்தக சங்கங்கள் முழு அடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து முழு அடைப்புப் போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுத்துவரும் போராட்டம் இன்றுடன் 50ஆவது நாளாகவும் தொடரப்பட்டுள்ளது.

கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 57ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், இன்றும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் எதிர்வரும் 27 அன்று வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் போராட்டத்துக்கு இணைவாக முல்லைத்தீவிலும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளனர்.

இதனடிப்படையில் இந்த போராட்டத்துக்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அனைத்து வர்த்தகர்களையும் கடைகளை அடைத்து பூரண ஆதரவை வழங்குமாறும் மக்கள் கோரிகை விடுத்துள்ளனர்.

இதற்கமைய முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கடைகளை அடைத்து மக்களுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அத்தோடு முல்லைத்தீவின் உடையார்கட்டு வர்த்தக சங்கத்தினர், விஸ்வமடு வர்த்தக சங்கத்தினர், ஒட்டுசுட்டான் வர்த்தக சங்கத்தினர், மாங்குளம் வர்த்தக சங்கத்தினர், மல்லாவி வர்த்தக சங்கத்தினர் அனைவரும் தமது கடைகளை அடைத்து மக்களுக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு வர்த்தக சங்கத்தினர் மற்றும் முள்ளியவளை வர்த்தக சங்கத்தினர் ஆகியோர் தற்சமயம் வரை தீர்மானம் மேற்க்கொள்ளவில்லை எனவும்  (26.04.2017) காலையில் கூட்டம் கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

You might also like