36ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, பன்னங்கண்டி மக்கள் மேற்கொண்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 36ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் பன்னங்கண்டி சரஸ்வதி கமம் மற்றும் ஜொனிக் குடியிருப்பு மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் போராட்டகாரர்கள், தமது குடியிருப்பு காணிக்கான ஆவணம், அடிப்படை வசதிகள் மற்றும் நிரந்தர வீட்டுத்திட்டம் என்பன இதுவரை கிடைக்கவில்லை.

எனவே இவ்வளவு காலமும் அடிப்படை உரிமை இல்லாத மக்களாக வாழ்ந்து விட்டோம். இனியும் அவ்வாறு வாழ முடியாது. தயவு செய்து எமக்கான காணி உரிமத்தினை வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அத்துடன் தமக்கான காணி உரிமம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே சிவபசுபதி கமத்தின் 63 குடும்பங்களுக்கும் அதன் உரிமையாளர் தனது காணியை அந்த மக்களுக்கு வழங்கியது போன்று, குறித்த காணியின் உரிமையாளர் இந்த காணியை மக்களுக்கு வழங்குவதற்கு முன்வர வேண்டுமெனவும் இந்த மக்கள் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதி கமம் பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான நீர் வரிக்காணியை பங்கிட்டு கடந்த 27 வருடங்களுக்கும் மேலாக 120 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like