போராட்ட வடிவங்களை மாற்றி முன்னெடுக்கவுள்ளோம் : கிளிநொச்சி மக்கள் ஆதங்கம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(26) 66ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றது.
இதுவரை தங்களது போராட்டத்திற்கு எந்த விதமான பதிலையும் வழங்காத அரசாங்கத்திற்கு கடும் அழுத்தங்களை கொடுக்கும் வகையிலும், இறுதி யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்குமான உரிய பதிலை இந்த அரசு வழங்க வேண்டுமெனக்கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசு எவ்வித பதிலையும் வழங்காத நிலையில், இந்த போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் நாளை(27) வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்த ஹர்த்தாலுக்கு பல்வேறு அமைப்புக்களும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள கதவடைப்பு (பூரண ஹர்த்தால்) போராட்டத்தை தொடர்ந்து இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் நெருக்குதல்களை கொடுக்கும் வகையில் தங்களுடைய போராட்ட வடிவங்களை மாற்றி முன்னெடுக்கவுள்ளோம் என மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.