கடையடைப்புப் போராட்டத்திற்கு கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் பூரண ஆதரவு!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் நாளை வியாழக்கிழமை (27) நடைபெறவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக, கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நடைபெறவுள்ள இந்த போராட்டத்திற்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் இயங்கிவரும் முப்பது கிளை நிலையங்கள் மற்றும் கிளிநொச்சி கரடிப்போக்கில் அமைந்துள்ள சங்கத்தின் பிரதான தலைமைச் செயலகம் என்பன முற்றாக மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக கூறினார்.
காணாமல்போன உறவுகளின் அழைப்பிற்கமைய, சங்க தீர்மானத்தின்படி இந்த அறிவிப்பை தாம் வெளியிட்டுள்ளதாகவும், கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கனகையா மதனரூபன் மேலும் தெரிவித்துள்ளார்.