யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அவலம்

யாழ். போதனா வைத்தியசாலையிலுள்ள சில நோயாளர் விடுதிகளில் அண்மைக்காலமாக இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாக பெரும் அவதியுறுவதாக நோயாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் தெரிவிக்கையில்,

விபத்துக்கள் மற்றும் திடீர்க் காயங்களுக்கு உள்ளாகி அனுமதிக்கப்படும் நோயாளர்கள் அனைவருக்கும் உரிய படுக்கை வசதியில்லாமையால் இரவு வேளைகளில் நிலத்தில் படுத்துறங்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் போதுமான இடவசதியின்மையால் முறையாக ஓய்வெடுக்க முடியாமல் உடல், உள ரீதியாகப் பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் 24ஆம் இலக்க நோயாளர் விடுதியில் புதிய நோயாளர்களை உள்ளீர்ப்பதற்காக அங்கு தங்கியுள்ள நோயாளர்கள் அடிக்கடி 30ஆம் இலக்க நோயாளர் விடுதிக்கு மாற்றப்படுகின்றமையால் ஏற்கனவே, இடநெருக்கடியிலுள்ள குறித்த விடுதியின் நோயாளர்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.

நோயாளர்கள் நிலத்தில் தங்கியிருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அடிக்கடி வருகின்ற காரணத்தினால், விடுதிக்கு வெளியேயும் தங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நோயாளர்கள் ஆளாகியுள்ளனர்.

இதனால், நோயின் தன்மை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது என நோயாளர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

எனவே யாழ். போதனா வைத்தியசாலையில் நிலவும் இடநெருக்கடிப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like