ஹர்த்தாலைக் குழப்புவதற்கு சில தீய சக்திகள் முயற்சி!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இரகசியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள உறவுகளை வெளிப்படுத்தி விடுதலை செய்யக் கோரி வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் இன்று (27) கடைப்பிடிக்கப்படவுள்ள ஹர்த்தாலைக் குழப்பும் நோக்குடன் சில தீய சக்திகள் கருத்துக்களை பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரது தொடர் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள பொதுமக்கள், அமைப்புக்கள் என அனைத்துத் தரப்பினராலும் வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பகுதிகளில் பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் இராணுவத்தினரால் தமது கண் முன்னே பிடித்துச் செல்லப்பட்டு இன்றுவரை அவர்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்தாமல், இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்து இராணுவத்தாலும் இராணுவத் துணை ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவுகளை வெளிப்படுத்தி விடுதலை செய்யுமாறு கோரியும் தமிழர் தாயகப் பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழர் விரோதச் சிந்தனை கொண்ட சில தீய சக்திகளால் ஹர்த்தால் கடைப்பிடிப்பதால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

இந்தக் ஹர்தால் கதவடைப்பால் பாதிக்கப்படுபவர்கள் தமிழ் மக்கள்தான். ஹர்த்தாலுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது. என மக்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்கள்.

ஹர்த்தாலைக் குழப்பும் நோக்கில் செயற்பட்டு மக்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துக்களைப் பரப்பி வருபவர்கள் சிலர் கடந்த காலங்களில் இராணுவ ஒட்டுக்குழுக்களாக செயற்பட்ட பின்னணியைக் கொண்டவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

இவர்களின் நோக்கம் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்கள் ஒன்றிணைவதைத் தடுப்பதும், கடந்த காலங்களில் ஒட்டுக்குழுக்களால் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டதற்கான விசாரணைகளிலிருந்து எதிர்காலத்தில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதுமாக காணப்படுகின்றது.

இதேவேளை, தீய சக்திகள் மக்கள் மத்தியில் குழப்பகரமான கருத்துக்களைப் பரப்பி வரும் நிலையிலும் தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்கி எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

You might also like