சற்று முன் கிளிநொச்சியில் ஏ9 வீதியினை வழிமறித்து போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் அமைதி போராட்டத்தில் ஈடுபட்டுவந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (வியாழக்கிழமை) வீதியை மறித்து பாரிய போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தமது பிள்ளைகள் தொடர்பான தகவல்களை வெளியிடக் கோரி கடந்த பெப்ரவரி மாதம் 20ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 67ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்ந்து வருகின்ற நிலையிலேயே, அம்மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.
தமக்கு தீர்வு கிட்டாவிடின் போராட்ட வடிவம் மாற்றம் பெறும் என ஏற்கனவே எச்சரித்துவந்த மக்கள் இவ்வாறு கிளிநொச்சி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் வடக்கு கிழக்கு எங்கும் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.