விடுதலைப் புலிகள் புதைத்த தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்த நபர்கள் கைது

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமுக்கு சொந்தமான காணி ஒன்றில் குழியை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்கத்தை தேடுவதற்காக இந்த நபர்கள் குழியை தோண்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கீழ் இயங்கும் பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான வாகனமும் சம்பவ இடத்தில் இருந்துள்ளது.

இந்த நபர் தம்மை பொலிஸார் என இராணுவத்திடம் முதலில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் புதைத்துள்ள தங்கத்தை அகழ்ந்து எடுப்பதற்காக அரசாங்கம் சட்டரீதியான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், இதற்கு முன்னர் இந்த குழுவினர் தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்துள்ளனரா என்பதை தேடிப்பார்க்க வேண்டும் எனவும் இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் பொலிஸாருக்கு தெரிந்து இப்படியான சம்பவம் நடக்க வாய்ப்பில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like