மல்லாவி வைத்தியசாலைக்குள் புகுந்து தாக்குதல்; 12 பேர் கைது
ஏற்கெனவே வாள்வெட்டுக்கு இலக்காகி, மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த இரண்டு பேர் மீது, வைத்தியசாலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுச் சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி, வவுனியா வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என, மல்லாவி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது, “மல்லாவி பொலிஸ் பிரிவில் உள்ள கல்விளான் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் குழுவுக்கும், திருநகர் கிராம இளைஞர் குழுவுக்கும் இடையில் நீண்டகாலமாக பகை நிலவி வந்துள்ளது.
இந்நிலையில்இரண்டு தரப்புக்கும் இடையில் மல்லாவி நகரப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த அண்ணன், தம்பி இருவர், மல்லாவிஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில், எதிர் தரப்பை சேர்ந்த ஏனைய இருவர் படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக இதே வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
அதன்போது, தம்முடன் மோதிய அண்ணன், தம்பிக்கு சிகிச்சை வழங்கப்படுவதைக் கண்டு , வைத்தியசாலையில் வைத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது ஏற்பட்ட மோதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளதுடன், மருத்துவ தாதி தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மருத்துவ உபகரணங்கள், மருந்துப் பொருட்களும் சிதறுண்டு சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, வைத்தியசாலைக்கு வந்த மல்லாவி பொலிஸார் நிலைமையைக் கட்டுப்படுத்தியுள்ளனர். வைத்தியசாலையில் புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யும் வரை தாம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக வைத்தியர்கள், ஊழியர்களி தெரிவித்த நிலையில், சம்பவ இடத்துக்கு மல்லாவி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைதுசெய்வதாக வாக்குறுதியளித்ததையடுத்து, வைத்தியசாலை வழமைக்கு திரும்பியது.
அதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபர்கள் 12, பேரை கைதுசெய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.