யாழில் ஹர்த்தாலை குழப்பும் வகையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலை

யாழ். வலிகாமம் பகுதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஹர்த்தாலைக் குழப்பும் வகையில் சுன்னாகத்தில் மது விற்பனை நிலையமொன்று திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்கு பாதிக்கப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஹர்த்தால் காரணமாக வலிகாமத்தின் முக்கிய நகரான சுன்னாகம் நகர் வெறிச் சோடிக் காணப்படும் சூழலில், விசாலமான மதுபான விற்பனை நிலையம் ஒன்று திறக்கப்பட்டு வியாபாரம் இடம்பெறுகிறது.

இந்த மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு அப்பகுதிக்கு குடிமக்கள் பெருமளவில் படையெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருந்தகங்கள், உணவகங்கள் கூட மூடப்பட்டிருந்த நிலையில் ஒரு மதுபான விற்பனை நிலையம் மாத்திரம் திறக்கப்பட்டு விற்பனை இடம்பெறுவது ஏன் எனக் கேள்வியெழுப்பியுள்ள வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர், இது ஹர்த்தாலை குழப்பும் வகையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு செயல் எனவும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

You might also like