ஹர்த்தாலால் யாழ். இளைஞனின் படுகொலை வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி இளஞ்செழியன்

சுன்னாகம் பொலிஸாரால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.இளைஞன் சுமணனின் வழக்கு விசாரணையின் தொகுப்புரை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

வடக்கு கிழக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஹர்த்தால் காரணமாக இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

பிரதி சொலிஸ்டர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நாகரட்ணம் நிசாந்த், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் காரணமாக போக்குவரத்து இடம்பெறவில்லை.

இதனால் பிரதி சொலிஸ்டரால் மன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை. எனவே தொகுப்புரைக்காக குறித்த வழக்கினை ஒத்திவைக்குமாறு” மன்றில் விண்ணப்பம் செய்தார்.

அதற்கு எதிர் தரப்பு சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவிக்காததால் குறித்த வழக்கினை யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் எதிர்வரும் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

You might also like