கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் மீண்டும் பணி பகிஸ்கரிப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நேற்று (28.04.2017) முதல் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

செயலாளர் சாதி பெயர்களை குறிப்பிட்டு தகாத வார்த்தைகளை பேசி அவமானப்படுத்தி வருவாதகவும் தொடர்ந்தும் பழிவாங்கும் நோக்கோடு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பழிவாங்கும் நோக்கோடு பணியாளர் ஒருவரை பணியில் இருந்து நிறுத்தியுள்ளார் என்றும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

சாதியை சொல்லி பேசிய செயலாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த மாதமும் சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பு செய்த போது கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் வருகை தந்து உரிய விசாரணையை மேற்கொண்டு தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், விசாரணைக் குழுவை அமைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை எனவும் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் கணேசன் கம்சநாதனிடம் வினவிய போது,

பணியாளர் ஒருவர் உரிய முன்னறிவித்தல் இன்றி விடுமுறை எடுத்தமையினால் அவர் திணைக்கள நடமுறைகளுக்கு அமைவாக பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனை தவிர இரண்டு வேலை வெளிக்கள தொழிலாளிகள்தான் ஏனைய பணியாளர்களையும் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

தான் தன்னுடைய வாழ்நாளில் எந்த சந்தர்ப்பத்திலும் சாதியின் பெயர்களை உச்சரித்தது கிடையாது.

அத்தோடு தகாதவார்த்தைகளையும் பேசியது கிடையாது இது பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளவர்கள் தங்களின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதற்காக கூறும் காரணங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினம் பணி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட பணியாளர்களை சந்தித்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் தான் வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளாருடன் பேசி தீர்வை பெற்றுத்தருவதாகவும் பணி பகிஸ்கரிப்பை கைவிடுமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை, அதனை பணியாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

You might also like