முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலக காணி அலுவலகம் பூட்டு

“முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு பிரதேச செயலக காணி அதிகாரியின் அலுவலகம், பிரதேச செயலாளரால்  பூட்டப்பட்டு, அதன் நடவடிக்கைகள் யாவும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், காணி தொடர்பான எமது தேவைகளை நிறைவு செய்ய முடியாதுள்ளது” என,  பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த புதன்கிழமை காலையிலிருந்து காணி அதிகாரியின் அலுவலகம் பூட்டப்பட்டு, அதன் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மாந்தைக் கிழக்கு பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மாந்தைக் கிழக்கு பிரதேச செயலகத்தில் இயங்கி வரும்  காணி அதிகாரியின் பொது மக்கள் சேவைகளின் போது, சில முறைகேடுகள் மற்றும்  ஊழல்கள் நடை பெற்று வருவதாக, பாதிக்கப்பட்ட பொது மக்கள் மற்றும் கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் நேரிலும்  எழுத்து மூலமாகவும் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இதனையடுத்து,  அதிகாரியின் நடவடிக்கை தொடர்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வந்த நிலையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக  காணி  அலுவலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலதிக  நடவடிக்கைகளை எடுப்பதற்காக,  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனுக்கு  எழுத்து மூலமாக அறிவித்துள்ளேன்.

எதிர்வரும் புதன்கிழமைக்கு முன்னதாக, அவரின் பதில்  கிடைத்தது விடும். வரும் வாரத்தின் கடைசி நாட்களில்  காணி அலுவலகத்தின் பணிகள் சிறப்பான முறையில் பொது மக்களுக்கு வழங்கப்படும்” என, அவர் மேலும் கூறினார்.

You might also like