முள்ளிவாய்க்கால் உதைபந்தாட்ட போட்டி! புலி ஆதரவாளர்களுக்குத் தொடர்பு? சிங்கள ஊடகம்

மே மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி உதைபந்தாட்டப் போட்டிக்கான ஏற்பாடுகளின் பின்னணியில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் இருப்பதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வார இறுதி சிங்கள பத்திரிகையொன்றின் பாதுகாப்பு அலசல் பகுதியில் குறித்த விடயம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் மே மாதம் 16ம் திகதி வடக்குப் பிரதேச விளையாட்டுக்கழகங்கள் மட்டும் பங்குபற்றும் வகையில் உதைபந்தாட்டப் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அக்கினிச்சிறகுகள் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த உதைபந்தாட்டப் போட்டியானது, முள்ளிவாய்க்கால் மோதலில் உயிரிழந்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் செயற்படுகின்றனர்.

இது தொடர்பாக அக்கினிச்சிறகுகள் விளையாட்டுக் கழக தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன் என்பவரை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

எனினும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சிங்கள ஊடகத்தின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-tamilwin-

You might also like