10 வருடங்களின் பின் சொந்த மண்ணில் காலடிவைத்துள்ள முள்ளிக்குளம் மக்கள்!

முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கிராம மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமது சொந்த மண்ணில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

முள்ளிக்குளம் மக்கள் மீண்டும் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் குறித்த மக்களை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன்,  வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், உட்பட பலர் சென்று குறித்த மக்களுடன் கலந்துரையாடியதுடன் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

கடற்படையினர் முதற்கட்டமாக 100 ஏக்கர் காணியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர். எனினும் சில தினங்களில் குழு ஒன்றை அமைத்து மக்கள் கடலுக்குச் சென்று வரும் பாதை உள்ளிட்ட பல்வேறு விடையங்களை கடற்படையூடாக நடை முறைப்படுத்தப்பட உள்ளதாகவும், முள்ளிக்குளம் கிராமத்திற்கு வந்துள்ள மக்கள் ஆலயத்தில் தங்கியிருந்து கட்டம் கட்டமாக தற்காலிக வீடுகளை அமைத்த பின் தமது இடங்களுக்குச் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தெரிவித்தார்.

முள்ளிக்குளம் மக்கள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி முதல் முள்ளிக்குளம் கடற்படை முகாமிற்கு முன்பாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வந்த நிலையில் 38 ஆவது நாள் போராட்டமான நேற்றையதினம்  குடியிருப்பு நிலங்கள் கடற்படையினரினால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like