அக்கராயன் குளத்தில் சிக்கிய ராஜபக்ஷர்களின் மோசடிகள்!

கிளிநொச்சி அக்கராயன்குளம் வடபகுதியில் மிகப்பெரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அக்கராயன் குளம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் பிரபலமான விடுமுறை தளமாக இருந்து வந்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அக்கராயன்குளத்தில் நாமல் ராஜபக்சவின் விடுமுறை விடுதி ஒன்றும் காணப்பட்டமைக்கான பல சாட்சிகள் உள்ளன.

நாமலின் விடுமுறைத் தளமான அக்கராயன் குளத்திற்கு நாமல் ராஜபக்ஷ, அடிக்கடி அரசியல்வாதியான ஸ்ரீரங்காவுடன் சென்று வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போதைய காலப்பகுதியில் கூடாரங்கள் மாத்திரமே அமைக்கப்பட்டிருந்தன.

1960ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அக்கராயன் குளம், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பிரபல இடமாக பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த இடத்தை பற்றி நன்கு தெரிந்து கொண்ட நாமல், அங்கு ஒரு அணைக்கட்டை கட்டும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்தார்.

இன்று வரையில் அக்கராயன் குளக்கட்டு பகுதியில் நடந்து சென்றால், இந்த அணைக்கட்டிற்காகவும் அதனை சுற்றியுள்ள நிர்மாணிப்பிற்காகவும் எவ்வளவும் பணம் வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதென்பதனை அவதானிக்க முடியும் என குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த அணைக்கட்டின் ஊடாக இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்ல முடியாது. அந்தளவிற்கு சிறியதாக காணப்படுகின்றது. அங்கு எவ்வித பாதுகாப்புகளும் இல்லாத நிலையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளதனையும் காணமுடிகின்றது.

பொது மக்களை ஏமாற்றி அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் மில்லியன் டொலர் தரகு பணம் பெற்றுக் கொண்டு ராஜபக்சர்கள் ஆடிய நாடகம் இன்னமும் வெளியாகிக் கொண்டே வருகின்றது.

வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பணத்தை திரட்ட முயற்சி செய்யும் நோக்கில் அந்தப் பகுதி இராணுவமயப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கராயன் குளம் அதற்கு சிறந்த உதாரணமாகும். யுத்தத்தில் வெற்றி கொண்ட ஆணவத்தில், இயற்கை வளங்களை பணமாக மாற்றிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அசிங்கமான முயற்சிக்கு அக்கராயன் குளம் ஒரு சாட்சியாக உள்ளதென குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம், ஸ்ரீரங்கா, ராஜபக்ஷ குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பேணியுள்ளார். நாமல், ஸ்ரீரங்கா மற்றும் டக்ளஸ் ஆகியோருக்கு இடையிலான நட்பை விக்கிலீக்ஸ் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like