வவுனியாவில் கிராமங்களை நோக்கி ஈ.பி.ஆர்.எல்.எவ்.இன் மேதினம்

வவுனியா நகருக்குள் நடத்தப்பட்டு வந்த மேதினக் கூட்டம் இம்முறை இன்று (01.05.2017) தொழிலாளர்கள், விவசாயிகளை இணைத்து வவுனியா செட்டிகுளப் பிரதேசத்திலுள்ள வீரபுரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

வீரபுரம் பிள்ளையார் ஆலயத்திலிருந்து எதிர்வரும் முதலாம் திகதி காலை 9மணிக்கு மேதினப்பேரணி ஆரம்பமாகி வீரபுரம் விளையாட்டு மைதானத்தை அடையும்.
தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் மேதினம் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் , செயலாளர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், செட்டிக்குள பிரதேச கட்சியின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளனர்.
மே தினம் என்பது இன்று முதலாளிகளால் கொண்டாடப்படும் கேளிக்கை விழாவாக மாறியுள்ளது. கிராமங்களில் உள்ள விவசாயிகள், தொழிலாளர்கள், சிற்றூழியர்கள், மாணவர்கள், உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து உண்மையான மேதினமாக செட்டிகுளம் வீரபுரத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி நினைவுகூர உள்ளது.

கிராமங்களில் உள்ள விவசாய, தொழிலாளர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் தினமாகவும், செட்டிகுளம் பிரதேசத்தில் உள்ள பொதுவான பிரச்சினைகளை அரசுக்கும், அதிகாரிகளுக்கும், உலகுக்கும் அறைகூவல் விடுக்கும் தினமாகவும் இம்மேதினம் நடைபெறவுள்ளது.

இன்று உலகை தனது சுரண்டலுக்குள் அகப்படுத்திவரும் உலகமயமாக்கல் என்னும் நவீன முதலாளித்துவத்தின் செல்லப்பிள்ளை, செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள இராசேந்திரம்குளம் கிராமத்தில் அமைந்துள்ள தையல் தொழிற்சாலையில் எவ்வாறு நுழைந்து தனது சுரண்டலை, ஒடுக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது என்பதனை உலகுக்கு வெளிக்கொண்டுவரும் மேதினமாக இம்மேதினம் திகழ்கிறது.

போர்ச்சூழலை உலகமே எதிர்நோக்கியுள்ள இவ்வேளையில் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமைகளை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு உலகின் ஒட்டுமொத்த ஆளும்வர்க்கத்துடன் கைகோர்த்து நிற்கும் சிறிலங்கா அரசுக்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் இம்மேதினத்தில் அணிதிரண்டு எமது அறைகூவலை உலகுக்கு உரத்துச் சொல்வோம் வாரீர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like