பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரத போராட்டம்!

கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மே நாளாகிய இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

1992 ஆம் ஆண்டு இரணைதீவில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்கள் முழங்காவில் இரணைமாதா நகரில் வாழ்ந்து வருகின்றனர். 2009 ஆம் ஆண்டின் பின்னர் தமது பூர்வீக நிலமான இரணைதீவிற்குச் செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கிராம மட்டத்திலும் பூநகரிப் பிரதேச செயலகம், கிளிநொச்சி மாவட்டச் செயலகம் என்பவற்றில் நடைபெற்ற கூட்டங்களில் தம்மை தமது பூர்வீக நிலத்திற்குச் செல்வதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இணைத் தலைவர்கள் இரணைதீவிற்குச் செல்வது என முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதற்கு கடற்படை அனுமதிக்க இல்லை எனவும் காரணம் கூறப்பட்டது. சில அரசியல்வாதிகள் இரணைதீவிற்குச் சென்று வந்தனர். மக்களை இரணைதீவிற்குச் செல்வதற்கான அனுமதியினையும் பெற்றுத் தருவோம் எனவும் தெரிவித்தனர். எவையும் நடைபெறாத நிலையில் மே நாளான இன்று இரணைதீவு மக்கள் இரணைமாதா நகரில் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

 

You might also like