இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை : ஒருவர் கர்ப்பிணி
ஹம்பாந்தோட்டை – ஹூங்கம, குருபொக்குன பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை இன்று மதியம் கண்டறிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
72 வயதான வயோதிப பெண்ணும் கர்ப்பிணியான 32 வயதான அவரது மகளும் இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்த வீட்டில் உள்ள அலுமாரிகள் அனைத்து கிளறப்பட்டு காணப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட வயோதிப பெண் சூரியவெவ பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் காரியவசம் என்பவரின் தாய் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண்ணின் கணவர் ஹம்பாந்தோட்டை தொழிற்நுட்ப கல்லூரிக்கு பாடநெறிக்காக சென்றிருந்தார். அவர் வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க வாசல் கதவு திறந்து காணப்பட்டுள்ளது.
வீட்டுக்குள் சென்று பார்த்த போது மனைவியும், மாமியாரும் கொலை செய்யப்பட்டு கிடந்ததாக கர்ப்பிணி பெண்ணின் கணவரான ஜயசிங்க கோரளே ஆராச்சிகே சம்பத் என்பவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.