மே தின கூட்டத்தில் பங்குபற்றியவர் பஸ் சக்கரத்தில் சிக்கி மரணம்!

மே தின கூட்டத்தில் பங்குபற்றிய பின் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் பஸ் சில்லில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

சிகிரியா, பிதுரங்கல பிரதேசத்தில் பஸ்ஸிலிருந்து கீழே வீழ்ந்த குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு ஏற்றிச் செல்லப்பட்ட பஸ்ஸில் சிகிரியாவிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த இவர், தங்களுடன் வந்தவர்களை, வீடுகளுக்கு விடுவதற்காக பிதுரங்கலை பிரதேசத்திற்கு சென்று அவர்களை வழியனுப்பி விட்டு நன்றி தெரிவித்து விட்டு, பஸ்ஸில் ஏறி தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

இதன்போது, இவர் மிதி பலகையிலிருந்து கீழே வீழ்ந்து பஸ்ஸின் சில்லில் சிக்கி விபத்திற்குள்ளாகியுள்ளார்.

நேற்று (02) அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, படுகாயமடைந்த இவர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துள்ளதாக பொலிசாரின் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் சிகிரியா, நவநகர பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான ஒரு பிள்ளையின் தந்தையான அதிகாரம் ஜனக என்பவர் என பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like