கட்டுநாயக்காவை நோக்கி சென்ற விமானத்தில் வெளிநாட்டு பெண் மரணம்

சவூதிஅரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணிப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்த பெண்ணொருவர் விமானத்தில் வைத்து உயிரிழந்துள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இன்று மாலை விமானத்தினுள் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

61 வயதான இந்தோனேஷிய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனது கணவருடன், சவூதி அரேபியாவுக்கு சொந்தமான விமான சேவையின் எஸ்.வி – 780 ரக விமானத்தில், ஜேடா நகரத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வேறு ஒரு விமானத்தில் இந்தோனேஷியா செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை நெருங்கும் முன்னர் குறித்த பெண் திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் விமானத்தினுள் அவர் உயிரிழந்துள்ளார்.

விமானம் மாலை 3.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

தற்போதுவரையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கட்டுநாயக்க பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய உயர் ஸ்தானிகர் அலுவலக ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like