தர்மபுரத்தில் அதிகாரிகளை தாக்கிய ஒருவர் கைது; மற்றவர்களுக்கு வலைவீச்சு
கிளிநொச்சி தர்மபுரம் பிரதேசத்தில் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் இருவரை தாக்கி, அவர்களுடைய கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர், நேற்று கைதுசெய்யப்பட்டதாக தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
தர்மபுரம், கல்லாறு காட்டில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய, கிளிநொச்சி வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் அங்கு சென்று 3 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு வரும் போது, அங்கு வந்த மற்றுமொரு தரப்பினர் அதிகாரிகளை தாக்கிவிட்டு, சந்தேகநபர்கள் மற்றும் மணல் ஏற்றப்பட்ட டிரக்டர் வண்டியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து, தருமபுரம் பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் தாக்குதல் நடத்திய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தப்பிச்சென்ற ஏனையவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார் கூறினர்.