கண்டி மே தினக் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்கள் மீது நடவடிக்கை!

கண்டி கட்டம்பேயில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் பங்குபற்றாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுவினை கூட்டி இது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என அவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

கண்டியில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தை புறக்கணித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்படும்.

இந்த விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்மானிக்க எதிர்வரும் நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமொன்று கூட்டப்படும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.

சிறு தொகுதியினர் சுதந்திரக் கட்சியின் கூட்டத்தை பகிஸ்கரித்த போதிலும், லட்சக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஓர் மேதினக் கூட்டம் நடத்தப்பட்டது.

எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கூடவுள்ளது.

இந்தக் கூட்டம் மிகவும் தீர்மானம் மிக்க ஒன்றாகும் என மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You might also like