73ஆவது நாளாகவும் கிளிநொச்சியில் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம்

எங்களை தெருவில் நிறுத்தி கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று(03) 73ஆவது நாளாகவும் தொடர்கிறது.

இந்த நிலையில் எவ்வித தீர்வுகளுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தமது போராட்டத்திற்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் எந்த வித பதிலையும் வழங்காது காலத்தை இழுத்தடித்து வருகின்றமை கவலைக்குரியது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவிக்கையில்,

நாங்கள் எங்கள் பிள்ளைகளை, எங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தும், சரணடைந்தும் இன்று எட்டு வருடங்களாகிவிட்டன. இருப்பினும் எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

நல்லாட்சியை ஏற்படுத்திய அரசாங்கம் தனது நூறு நாள்வேலைத்திட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு உரிய பதிலை வழங்குவதாகவும் தெரிவித்திருந்தது.

ஆனால் எங்களுக்கான வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் இதுவரை காலமும் நிறைவேற்றவில்லை.

இன்று 73ஆவது நாளாகவும் நாங்கள் வீதியில் கண்ணீருடன் இருந்து கொண்டிருக்கின்றோம். எங்களது கோரிக்கையை யாரும் செவிசாய்த்து கேட்டு எங்கள் உறவுகள் தொடர்பில் எந்தப்பதிலையும் இதுவரை வழங்கவில்லை.

இந்த நல்லாட்சி அரசாங்கம் நல்ல பதிலை தரவேண்டும். எங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா? என தெரிவித்துள்ளனர்.

You might also like