யாழில் அதிகரித்துள்ள சட்டவிரோத மணல் அகழ்வுகளால் மக்கள் பாதிப்பு
யாழில் மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, புவிச்சரிதவியல் சுரங்கங்கள் பணியகத்தின் நேரடிக் கண்காணிப்பாளர்களின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம், குடாரப்பு வடக்கு கிராமத்தை மையமாகக் கொண்டு, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வு நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பான வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் அப்பகுதிகளும், அப்பகுதி மக்களும் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர் என அப்பகுதி மக்களால் தொடர்ந்து முறையிடப்பட்டு வருகின்றது.
மாதத்திற்கு சுமார் 2500 கியூப்புகளுக்கும் அதிகளவிலான மணல் சட்டவிரோதமான முறையில் அகழப்பட்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
அதேநேரம், சட்டத்திற்கு புறம்பான விதிமுறைகளை வகுத்து மணல் அகழ்விற்கான அனுமதியை வழங்குவோர் தங்களுக்கு நெருக்கமான ஒரு சில ஒப்பந்தக்காரர்களுக்கு மாத்திரம் மேற்படி அனுமதிகளை வழங்குவதாகவும், இதன் ஊடாக மணலுக்கு யாழ் குடாநாட்டில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, அதனது விலையை அதிகரித்தும், அளவுகளில் குறைபாடுகளைக் கொண்டும் அதிக இலாபமீட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது.
எனவே, மேற்படி மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும் தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.