ஆனந்தபுரத்தில் தங்கப் புதையல் அகழ்வு பணிகள் ஆரம்பம்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகப் பிரிவினர் ஆனந்தபுரப் பகுதியில் புதைத்து வைத்ததாக கூறப்படும் தங்க நகைகளை அகழ்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று(3) பிற்பகல் குறித்த பகுதியில் பொலிஸார் அகழ்வு பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் நேரில் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்ப்பாக மேலும் தெரியவருவதாவது,

2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் சிவில் நிர்வாகப் பிரிவின் கீழ் தமிழீழ வைப்பக தங்கநகை அடகு சேவை மற்றும் தங்க நகை வர்த்தக வாணிபம் என்பன இயங்கிவந்துள்ளன.

இந்த நிலையில் பொதுமக்களின் அடகு நகைகளை உரியவர்களிடம் மீள் கையளிக்கும் நோக்கத்துடன் தமிழீழ வைப்பக நிர்வாகம் இறுதி யுத்தத்தின் போது அடகு நகைகளை நிலத்தில் புதைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தங்க நகை வர்த்தக வாணிபங்களில் கடமையாற்றிய பிரதான ஊழியர்கள் தங்க நகைக் கணக்குகளை உரிய முறையில் விடுதலைப்புலிகளிடம் கையளிப்பதற்கு தற்காலிகமாக நிலத்தில் குழிதோண்டிப் புதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முல்லைத்தீவு ஆனந்தபுரப்பகுதியில் விடுதலைப்புலிகள் தங்க நகைகளை புதைத்து வைத்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்ட நிலையில் அந்த இடத்தில் அகழ்வு பணிகளை பொலிஸார் இன்றைய தினம் ஆரம்பித்துள்ளனர்.

 
You might also like