5 மாணவர்கள் 11 பேர் கடத்தல் விவகாரம்: நிலத்தடி சித்திரவதை கூடத்தில் கொலைகள் இடம்பெற்றுள்ளன

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவத்தில் கடத்தப்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருந்த திருமலை கன்சைட் சித்திர வதைக் கூடத்தில் படுகொலைகள் இடம்பெற்றுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பிரகாரமே இந்த கடத்தல் மற்றும் காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொறுப்புக் கூற வேண்டியோருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் எந்த பழிவாங்கல்களும் நோக்கங்களும் கிடையாது என குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா இன்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய புற நகர் பகுதிகளில் இருந்து வெள்ளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று மீளவும் கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன் போது கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களில் மூவர் சார்பில், தாம் பழி வாங்கப்படுவதாகவும், தமக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு தொடர்பில் வழக்குத் தொடுக்க எந்த ஆதாரமும் இல்லை எனவும் நீதிவானிடம் குறிப்பிட்ட போது அதற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மேற்படி பதிலளித்தார்.

அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களான கடற்படை லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆராச்சி கடற்படை தலைமையகத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் சட்ட பூர்வமாக வெளி நாடு செல்லவில்லை என்பதை உறுதி செய்துள்ள நிலையில் சட்ட விரோதமாக வெளி நாடொன்றுக்கு கடல் மார்க்கமாக சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அது தொடர்பில் உறுதி செய்ய பூரண விசாரணை இடம்பெறுவதாகவும் அவர் நீதிவான் லங்கா ஜயரத்னவிடம் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான லெப்டினன் கொமாண்டர் சம்பத் முனசிங்க கைதாகி பிணையில் உள்ள நிலையில், மற்றைய பிரதான சந்தேக நபரான லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி தேடப்படும் நிலையில் அவர்களின் கீழ் பணியாற்றிய இரு கடற்படை வீரர்களான இறுதியாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது சந்தேக நபர்களான நலின் பிரசன்ன விக்ரமசூரிய, தம்மிக தர்மதாஸ ஆகியோர் இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் அவர்களை அடையாளம் காட்ட சாட்சியாளர்களால் முடியவில்லை.

You might also like