45 நாட்களுக்குள் நால்வர் மரணம் : அச்சத்தில் வவுனியா தட்டான்குளம் மக்கள்

வவுனியா, செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தட்டான்குளம் கிராமத்தில் கடந்த 45 நாட்களுக்குள் சிறுநீரக நோயினால் நால்வர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இக் கிராமத்தில் உள்ள குடிநீர் காரணமாகவே சிறுநீரக நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அந்த பகுதி மக்கள் இந்த கிராமத்தை விட்டு வெளியேற கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்த வடபகுதியைச் சேர்ந்த மக்கள் அனைவரும் வவுனியா பூந்தோட்டம் மற்றும் நெளுக்குளம் போன்ற நலன்புரி நிலையங்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டனர்.

இதே வேளை மீண்டும் அந்த மக்கள் 2006ஆம் ஆண்டு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் உதவியுடன், வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு தட்டான்குளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்டிருந்தனர்.

அன்றிலிருந்து இந்த பிரதேசத்தில் தொடர்ந்து வாழ்ந்து வரும் மக்களில் நூற்றுக்கும் அதிகமானோர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 45 நாட்களுக்குள் சிறுநீரக நோய் காரணமாக நால்வர் மரணமடைந்துள்ளதுடன், பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இது குறித்து இந்த பிரதேச மக்கள் அரச அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என சம்பந்தப்பட்ட பலரிடமும் முறையிட்டும் எந்த தீர்வும் கிடைக்கப்பெறவில்லை.

இந்நிலையில் தமது பிள்ளைகளை என்றாலும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கிராமத்திலிருந்து மக்கள் வெளியேற தீர்மாணித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like