கொள்ளையடித்து விட்டு கத்தியால் பெண்களை தாக்கிய இனந்தெரியாத நபர்கள்

மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து இனந்தெரியாத நபர்களினால் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த தாயும், மகளும் கத்தியால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியின் குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீட்டு உரிமையாளரான எம்.தாரீக் என்பவர் வெளிநாட்டில் தொழில் புரிந்து வரும் நிலையில், அவரது மனைவியும், மகளும் வீட்டில் இருந்த போது இனந்தெரியாத இருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளனர்.

இதன் போது வீட்டிலிருந்த பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அவர்கள் கொள்ளையிட்டுள்ளதுடன், குறித்த பெண் சத்தமிட்டபோது அவரை தாக்கிவிட்டு இருவரும் தப்பி சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 40,000 ரூபா பணமும், தங்க சங்கிலி இரண்டும் கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் காயமடைந்த தாரீக் ரேனுகா என்பவர் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த சந்தேக நபர்கள் கூரையைப் பிரித்து வீட்டிற்குள் வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like