வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகில் பேருந்து விபத்து. அப்பகுதியில் பதட்டம்

வவுனியா மன்னார் வீதி குருமன்காட்டு சந்திக்கு அருகாமையில் இன்று(04.05.2017) மாலை 6.00
மணியளவில் வவுனியாவிலிருந்து செட்டிகுளம் பயணிக்கும் அரச பேருந்து ஒன்றும் வவுனியாவிலிருந்து பாவற்குளம் பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றும் சிறிய விபத்துக்குள்ளானதுடன் இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அப்பகுதியில் சிறு பதற்றம் நிலவியது.
அரச பேருந்தை தனியார் பேருந்து முந்திச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக இச் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். எனினும் பாரிய சேதம் ஏதும் ஏற்படவில்லை என்பதுடன் பேருந்தில் சிறிய சேதங்கள் ஏற்பட்டிருந்தது
விபத்து ஏற்பட்ட பகுதியானது மாலை வேளைகளில் சன நெரிசல் மிகுந்த பகுதி என்பதுடன் தனியார் கல்வி நிலையங்கள் அதிகம் காணப்படும் இடம். விபத்து இடம்பெற்ற நேரமானது மாணவர்கள் அதிகம் பயணிக்கும் பகுதியாகும் தெய்வாதீனமாக பாரிய சேதங்கள் இவ்விபத்தில் ஏற்படவில்லை ஆனால் இதை மனதில் நிறுத்தாது இவ்வாறு கண்மூடிதனமாக செயற்படும் சாரதிகளுக்கு எதிராக தனியார் பேருந்து சங்கமாகட்டும் அரச சாலை ஆகட்டும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பவ இடத்தில் நின்ற சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் விசனம் தெரிவித்ததை காணக்கூடியதாக இருந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிஸார் பதற்றத்தை தணித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.