வித்தியா வழக்கின் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்படும்! நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் உறுதி

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தக்கல் செய்யப்படவுள்ளது.

இதன்படி வழக்கின் குற்றப்பத்திரிகை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்படும் என அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் இன்று உறுதியளித்துள்ளார்.

குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்க மறியல் காலத்தை நீடிக்க கோரி யாழ்.மேல் நீதிமன்றில் மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.

இதன்போது, “குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் என்பன எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் பரப்படுத்தப்படும். அதுவரையில் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க வேண்டும்” என அரச சட்டவாதி கோரினார்.

தொடர்ந்து 4ஆம், 7ஆம் மற்றும் 9ஆம் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சரத் வல்கம தெரிவிக்கையில்,

“குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள தனது தரப்பினர்கள் இரு வருட காலமாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். சந்தேகநபர்களை இரண்டு வருட காலத்திற்கு விளக்கமறியலில் தடுத்து வைக்க அனுமதி வழங்கும் அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு இல்லை. எனவே எனது தரப்பினரை தகுந்த பிணையில் விடுவிக்க வேண்டும்” என விண்ணப்பம் செய்தார்.

அதனை தொடர்ந்து நீதிபதி உத்தரவு பிறப்பிக்கையில்,

“மரண தன்டனை மற்றும் ஆயுள் தண்டனை குற்றங்களுக்கு உரிய சந்தேகநபர்களின் பிணை தொடர்பில் மேல் நீதிபதிக்கு தீர்மானிக்கும் அதிகாரம் உண்டு. ஆகவே சந்தேகநபர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்”

You might also like