வித்தியா கொலை வழக்கு! மேல்நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டால் விரைவில் தீர்ப்பு! நீதிபதி இளஞ்செழியன்
யாழ்.மேல் நீதிமன்றில் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுப்பேன் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள 9 சந்தேக நபர்களின் விளக்க மறியல் காலத்தை நீடிக்கக் கோரி யாழ்.மேல் நீதிமன்றில் மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அவ்வேளை அரச சட்டவாதி எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் வழக்கின் குற்றப் பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் மன்றில் பாரப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதி வழக்கின் குற்ற பகிர்வு பத்திரம் மற்றும் ஆவணங்கள் பாரப்படுத்தப்பட்டால் தொடர் திகதியிட்டு விசாரணைகளை முன்னெடுத்து விரைவில் தீர்ப்பினை வழங்குவேன் என தெரிவித்தார்.
அவ்வேளை குறித்த வழக்கின் 4ம் , 7ம் மற்றும் 9ம் சந்தேக நபர்கள் சார்பில் மாத்திரமே சட்டத்தரணி சரத் வல்கம முன்னிலையாகி இருந்தார். ஏனைய சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாகவில்லை.
அந்நிலையில் , குறித்த வழக்கின் முதலாவது சந்தேக நபர் , எமது சார்பாக முன்னிலையாக யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் எவரும் முன் வருகின்றார்கள் இல்லை. நாம் அன்றாடம் உழைத்து உண்பவர்கள். எமக்கு பெருமளவில் நிதி செலவளித்து சட்டத்தரணிகளை பிடிக்க முடியாது என மன்றில் தெரிவித்தார்.