கிளிநொச்சியில் கொண்டாடப்பட்ட சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம்

தாய்சேய் நலன்களை பேணிப்பாதுகாக்க உதவும் குடும்பநல மாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில் சர்வதேச குடும்பநல மாதுக்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நேற்று(05) கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஒழுங்கமைப்பில் கரைச்சி பொதுச்சுகாதார தாதிய உத்தியோகத்தரது நெறிப்படுத்தலில் சர்வதேச குடும்ப நல மாதுக்கள் தினம் கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையின் மகப்பேற்று நிபுணர் வைத்திய அதிகாரி பாபு பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்ததோடு சிறப்பு விருந்தினராக மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சேவையாற்றும் குடும்ப நலமாதுக்கள், மாவட்டத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற மற்றும் மாவட்டத்தில் சேவையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற குடும்ப நலமாதுக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதே வேளை கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சந்திரகலா,சுமங்கலி,வளர்மதி ஆகியோரும், கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அமிர்தசுலோச்சனா, லோறன்ஸ்பவுல்மேரிஅனற்றி, கவிதா ஆகியோர் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுஜீபா, அருள்நிதி, கவிதாசாந்தமூர்த்தி, ஆகியோரும் பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசந்தமதி, சிவலோஜினி, ஜெயபோதினி போன்ற குடும்ப நலமாதுக்களும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் குடும்ப நலமாதுக்களின் சேவைக்கு மதிப்பளிக்கும் நோக்கில் 1992ம் வருடத்திலிருந்து வருடா வருடம் வைகாசி மாதம் 5ம்திகதி அன்று சர்வதேச குடும்பநல மாதுக்கள்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like