ஆறாவது நாளாகவும் தொடரும் இரணைதீவு கடற்தொழிலாளர்களின் போராட்டம்

கிளிநொச்சி – இணைதீவு பகுதியில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதற்கான அனுமதிகளை நல்லாட்சி அரசு பெற்றுத்தர வேண்டும் என இரணைதீவு கடற்தொழிலாளர்கள் போராட்டம் ஒன்றிணை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போது தங்கியுள்ள இரணைமாதா நகர் கடற்கரையோரத்தில் மேற்கொண்டு வரும் போராட்டம் ஆறாவது நாளாகவும் இன்று (06) தொடர்ந்துள்ளது.

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் அதிக கடல்வளம் கொண்ட பகுதியாக காணப்படும் இரணைதீவு என்ற கடற்தொழில் கிராமத்தில் வாழ்ந்த 242 வரையான குடும்பங்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போதும்,

இதுவரை இந்த பகுதி மக்கள் தங்களது சொந்த நிலத்தில் மீள்குடியமர்வதற்கோ அல்லது தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுதிகளோ இதுவரை வழங்கப்படவில்லை.

இதற்கான அனுமதிகளை பெற்றுத்தருமாறும் இந்த பகுதி கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரணைதீவுக் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் 1992 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு முழங்காவில் பகுதியில் இரணைமாதா நகர் என்ற மாதிரிக்கிராமம் உருவாக்கப்பட்டு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டதுடன்,

இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவும் ஏற்படுத்தப்பட்டுள்ள போதும் இவர்களுக்கான கடற்தொழிலுக்கான வசதி வாய்ப்புக்கள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இவ்வாறு தங்கியுள்ள மக்கள் எங்களது சொந்த இடத்திற்கு சென்று தொழில் செய்வதற்கும் இரணைதீவில் உள்ள தங்களது கால்நடைகள் காணிகள் என்பவற்றை பராமரிப்பதற்கும் உரிய அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என கடந்த 2010 ஆம் ஆணடு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதற்கான அனுமதிகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை கடந்த ஆண்டு செப்ரம்பர் மாதம் 3ஆம் திகதி பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்திலும் இரணைதீவில் தங்கி நின்று தொழில் செய்வதற்குரிய அனுமதிகளைப் பெற்றுத் தருமாறு இப்பகுதி கடற்தொழிலாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2016 ஆண்டு செப்ரம்பர் மாதம் மாதம் முற்பகுதியில் இரணைமாதா நகரில் தங்கியுள்ள இரணைதீவு மக்களைச் சந்தித்து கலந்துரையாடிய சிறுவர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் இரணைதீவுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

இதற்கான அனுமதியை ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி இதற்கான முழுயைமான அனுமதிகளைப் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து 2016 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா இரணைதீவுக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

மக்களுடன் கலந்துரையாடி மீனவர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக அதற்கான அனுமதிகளைப் பெற்றுத்தருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை அங்கு சென்று தொழில் செய்வதற்கு கடற்படையினர் அனுமதிகள் வழங்கவில்லை எனவும் இதனால் தாங்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இந்த பகுதி கடற்தொழிலாளர்கள் நல்லாட்சி அரசு இதற்கான அனுமதியை தரவேண்டும் என கோரி கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

You might also like