வவுனியாவில் அதிக பணம் செலுத்தும் மின் பாவனையாளர்கள்

வவுனியாவில் மின்சார சபையின் ஊழியர்கள் சீரான முறையில் மின்பட்டியலை வழங்காமையினால் மின் பாவனையாளர்கள் அதிகளவு பணத்தினை மின்சார சபைக்கு செலுத்தவேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மின் பாவனையாளர் கருத்து தெரிவிக்கையில்,

மின்சார பாவனைக்கான பட்டியலில் அளவீட்டு முறையில் பணம் அறவிடப்படுகின்றது. குறிப்பாக முதலாவது யூனிட்டில் இருந்து 156 ஆவது யூனிட் வரையான ஒவ்வொரு 39 யூனிட்டுக்கும் அறவீட்டு தொகை மாற்றம் அடைந்து செல்லும்.

இதன்போது 79 ஆவது யூனிட்டில் இருந்து 117 ஆவது யூ10னிட் வரையும், யூனிட் ஒன்றின் விலை 10 ரூபாவாகவும் 118 ஆவது யூனிட்டில் இருந்து 156 ஆவது யூனிட் வரை 27.75 ரூபாவாகவும், 157 ஆவது யூனிட்டில் இருந்து 179 ஆவது யூனிட் வரை 32 ரூபாவும் அறவிடப்படுகின்றது.

இந்நிலையில் மாதாந்தம் குறித்த திகதியில் மானிவாசிப்பு அளக்கப்படும் பட்சத்தில் குறித்த மின்பாவனையாளரின் பாவனையினைப் பொறுத்து சீரான மானியின் வாசிப்பு அளவிடப்படும். நிதியும் குறைந்தளவில் அல்லது சீரான அளவில் காணப்படும்.

எனினும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடுகள் மேற்கொள்ளப்படும் போது குறித்த மின் பாவனையும், மின்மானியின் வாசிப்பும் அதிகரித்துள்ள நிலையில் மின் பாவனையாளர் தமது மின் பாவனைக்கான கட்டணத்தினை அதிகரித்து செலுத்தவேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படுகின்றது.

இதன் காரணமாக வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பல குடும்பங்கள் அதிகளவான பணத்தினை செலுத்தும் நிலை ஏற்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இந் நிலையில் வடக்கின் வந்தம் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்பட்ட பலருக்கு இதுவரை மானிவாசிப்பு அளவிடப்படாமையினால் குறித்த பயனாளிகள் மிக அதிகளவான பணத்தினை செலுத்தும் நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

You might also like