முல்லைத்தீவில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் தடயங்கள்

இறுதி யுத்தத்தின் போது பல ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட இராணுவத்தினரின் இழப்புக்களை காட்டும் இராணுவத் தடையங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் தற்பொழுதும் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

2000 ஆம் ஆண்டு இலங்கை முப்படையினரும் தமிழிழ விடுதலைப் புலிகளும் சம பலத்துடன் இருப்பதாக அப்போதைய இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

இதன் காரணமாக நோர்வே நாட்டின் நடுநிலைமையில் சமாதானப் பேச்சுக்களில் இரு தரப்பு படைகளும் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் குறித்த சமதானப் பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில் மீண்டும் ஒரு பெரும் போர் மூண்டது.

2006 சம பலத்துடன் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர் கொள்வதற்கு இலங்கையின் முப்படையினரும் பல்வேறு நவீன ஆயுத வசதிகளுடன் தயாராகினார்கள்.

அப்பொழுது முப்படையினரின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு விடுதலைப் புலிகளும் தமது படைக் கட்டுமானங்களை மேலும் பலப்படுத்தினார்கள்.

இந்நிலையில் இலங்கையின் முப்படையினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அப்பொழுது விடுதலைப் புலிகள் தமது பலமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவப் படையெடுப்புக்களை முறியடித்துள்ளனர்.

குறிப்பாக ஏ 9 யாழ் – கண்டி பிராதன வீதி, முகமாலை மற்றும் புளியங்குளம் இரு வழியூடாக இராணுவப் படைகள் நகர்வை மேற்கொள்ள முயற்சித்த போது அவற்றை விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் முறியடித்ததில் இராணுவத்தினர் பெரும் இழப்புக்களை சந்தித்தனர். எனினும் இராணுவத்தினர் தமது படை நகர்வுகளை வேறு திசைகளுக்கு மாற்றினார்கள்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்குமான இறுதி யுத்தம் முள்ளிவாய்க்களில் ஆரம்பமாகியது.

அப்பொழுது அதி உச்ச பலத்தை இரு தரப்பினரும் பிரயோகித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக இராணுவத்தில் தளபதிகள் உட்பட ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அத்துடன் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட பல போராளிகள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தற்பொழுது முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் போர்த் தடயங்கள் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கை இராணுவத்தினரின் இழப்புக்களுடன் தொடர்புடைய இராணுவத் தடயங்களும் ஆங்காங்கே அதிகமாகக் காணப்படுகின்றது.

இறுதி யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் ஆகும் நிலையில் இவ்வாறு இராணுவத்தினரின் தடயங்கள் பொது மக்கள் வாழ்விடங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்றமையால் உள்நாட்டு யுத்த முடிவின் போது இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் மத்தியில் கருதப்படுகின்றது.

முல்லைத்தீவு மந்துவில் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இராணுவத்தினரின் நினைவுத் தூபியைப் பார்ப்பதன் மூலம் இறுதிக் கட்டப் போரில் பல இராணுவப் போர் வீரர்கள் இறந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like