தற்கொலையை நேரலையில் ஒளிபரப்ப முயன்ற பெண்: முறியடித்த பொலிஸ்

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் தற்கொலை செய்து கொள்வதை பேஸ்புக் லைவ் மூலமாக நேரலையில் ஒளிபரப்ப முயன்ற பெண்ணை பொலிசார் காப்பாற்றியுள்ளனர்.

மராட்டிய மாநிலம் மும்பை சேவ்ரி பகுதியில் 18 மாடி குடியிருப்பு ஒன்று கட்டப்பட்டுவருகிறது. இந்தக் கட்டிடத்தின் 18-வது தளத்துக்குச் சென்ற 32 வயது வழக்கறிஞர் பிரியங்கா ஜீதாலால் மாரு அங்கிருந்து கீழே குதிக்க ஆயத்தமானார்.

மேலும் அவர் தன்னைத்தானே வீடியோவும் எடுத்துக் கொண்டிருந்தார். இதை அருகாமையில் இருந்த கட்டிடத்தில் இருந்த மற்றொரு பெண் கவனித்தார். அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த பொலிசார் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதை சாதுர்யமாக தடுத்து நிறுத்தினார். ஷாலினி சர்மா என்ற பெண் ஆய்வாளர் பிரியங்காவிடம் லாவகமாகப் பேசி அவர் தற்கொலை செய்து கொள்வதைத் தடுத்துள்ளார்.

கடந்த மாதம் பாந்தரா பகுதியில் 23 வயது இளைஞர் ஒருவர் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அந்தக் காட்சி ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பானது.

இந்நிலையில், அதே பாணியில் நடைபெறவிருந்த சம்பவத்தை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

You might also like