கிளிநொச்சி அலுவலகங்களில் பெரும்பான்மையின அலுவலக உதவியாளர்கள்

கிளிநொச்சியில் உள்ள சில மத்திய அரசின் திணைக்களங்களில் சமீப காலமாக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞர்கள் அலுவலக உதவியாளர்களாக நியமிக்கப்படுகின்றமை குறித்து, பல வருடங்களாக அமைய அடிப்படையில் பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்காத இளைஞர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இவ்விடயம் குறித்து மாவட்டச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

இவ்வருடம் மாத்திரம் கிளிநொச்சி மாவட்டத்தில் ஐந்து அலுவலக உதவியாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் கரைச்சி பிரதேச செயலகத்திற்கும், இருவர் மாவட்டச் செயலகத்திற்கும் ஒருவர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கிளிநொச்சி மாவட்டத்தில் பல வருடங்களாக அமைய அடிப்படையில் பணியாற்றிய பலருக்கு நிரந்தர நியமனம் கிடைக்காத நிலையில், தென்னிலங்கையில் இருந்து அலுவலக உதவியாளர் பதவிக்கு அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில் ஒரு அலுவலக உதவியாளர் ஓய்வுப்பெற்ற சில நாட்களிலேயே தென்னிலங்கையில் இருந்து நியமனங்கள் வழங்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர் பதவிகள் அரசியல் செல்வாக்கின் அடிப்படையிலேயே நியமிக்கப்படுகின்றன. மிகவும் குறைந்த தகைமைகளுடனான இப்பணிக்கு பொருத்தமானவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் மாவட்டச் செயலக வேலை வங்கியில் தங்களது பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

அத்தோடு இப் பதவியானது எந்த நேரத்திலும் சமூகமளித்து கடமைகளைச் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக காணப்படுகிறது.

எனவே இந்தப் பதவிகளுக்கு அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவதே பொருத்தமானதாகும்.

அதனை இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளே செய்ய வேண்டும். இதன் காரணமாக தொடர்ந்தும் எமது இளைஞர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு தற்போது நியமனம் பெற்று வந்தவர்கள் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் இடமாற்றம் பெற்று தங்களின் பிரதேசங்களுக்கு சென்றுவிட்டால் இங்குள்ள வெற்றிடம் நிரப்பப்படாமலேயே காணப்படும், எனினும் பதிவில் ஆளணி வெற்றிடம் நிரப்பட்டதாகவே இருக்கும் என அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like