எமது நிலங்களில் ராடார் தளங்களை அமைக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கமாட்டோம் – இரணைத்தீவு மக்கள்

எமது தாய் நிலத்தில் பாக்கு நீரிணையை கண்காணிக்கும் பாரிய ராடார் தளங்களை நிறுவ முயற்சிக்கும் அரசின் செயற்பாடுகளை ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை என இரணைத்தீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணி விடுவிப்பை வலியுறுத்தி எட்டாவது நாளாகவும் நேற்றைய தினம் போராட்டம் முன்னெடுத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்கள்,

எமது மண்ணை அபகரித்து அதில் கடற்படைக்கு பாரிய ராடார் தளத்தினை நிறுவி கண்காணிப்பில் ஈடுபடப் போவதால் மக்களை மீள்குடியேற்றம் செய்யமுடியாது என அரசு திட்டமிடுவதை நாங்கள் அறிகின்றோம்.

எமது உயிர் போனாலும் பாரம்பரியமாக தொழில் செய்து வந்த பூர்வீக நிலத்தை கடற்படைக்கோ அல்லது வேறு எந்தத் தேவைக்களுக்கோ விட்டுக்கொடுக்கப் போவதில்லை.

எமது நிலம் எமக்கு வேண்டும். அதுவரை எமது உயிரே போனாலும் போராட்டத்தை கைவிடப்போவதில்லை. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் நாம் போராட்டத்தில் இருந்து பின்வாங்கப்போவதில்லை.

கடந்த காலம் போல அரசுக்கு ஆதரவாக எமக்கு பொய் வாக்குறுதிகளை வழங்கி எமது போராட்டங்களை சிதைக்க தமிழ் அரசியல்வாதிகள் முனைந்தால் அவர்களுக்கு தக்க பாடத்தை எதிர்வரும் தேர்தலில் புகட்டுவோம் எனவும் தெரிவித்தனர்.

 

You might also like