முள்ளிவாய்க்கால் நிகழ்வை கேலி கூத்தாக யாரும் மாற்ற கூடாது

எவரும் முள்ளிவாய்க்கால் நிகழ்வை கேலி கூத்தாவோ அல்லது வேடிக்கை நிகழ்வாகவோ மாற்ற கூடாது என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

முள்ளியவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வானது மக்களது துயரங்களையும், துன்பங்களையும் வெளிப்படுத்துகின்ற மற்றும் அவர்கள் தங்களது ஆற்றாமைகளையும், மனச்சுமைகளையும் இறக்கி வைக்கின்ற ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும்.

எவரும் இந்த முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒரு கேலி கூத்தாகவோ, வேடிக்கை நிகழ்வாகவோ அல்லது தங்களது பலங்களை மேலும் ஸ்திரப்படுத்திக் கொள்ளும் நிகழ்வாகவோ கருதவும் கூடாது. மாற்றவும் கூடாது.

மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தக் கூடிய வகையிலும், அவர்கள் அனைவரும் அதில் பங்காளிகளாகும் வகையிலும் அந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அனைவரிடமும் முன்வைக்கின்றேன்.

இவ்வாறு மக்களை ஒன்று கூட்டுவதற்கும், அவர்களை பங்காளிகளாக மாற்றுவதற்கும் இரண்டு விதமான செயற்பாடுகளை செய்ய முடியும்.

அனைத்து மக்களும் முள்ளிவாய்காலுக்கு செல்லக் கூடிய போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மற்றது, அவர்கள் அனைவரும் அங்கு தீபம் ஏற்றக் கூடிய ஒழுங்கைச் செய்ய வேண்டும்.

இதற்காக அனைத்து பொதுமக்களும், பிரதிநிதிகளும் இணைந்து செயற்பட வேண்டும். இதனை நான் அனைத்து தரப்பிடமும் முன்வைக்கின்றேன்.

இதனை ஒரு தனிப்பட்ட நிகழ்வாக கருதாமல் அல்லது யாராவது இதில் தங்களை பலப்படுத்திக் கொள்கின்ற நிகழ்வாக கருதாமல், விளையாட்டு போட்டிகளை வைத்து பரிசில்கள் கொடுத்து கைதட்டுகின்ற நிகழ்வாக மாற்றாமல் உணர்வுபூர்வமான ஒரு நிகழ்வாக நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like