இளைஞர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த செஞ்சிலுவை சங்கம் முன்னிற்கும்!

கடந்த காலங்களில் இயற்கை மற்றும் மனித அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க செஞ்சிலுவை சங்கம் முன்னின்று உழைத்தது.

மக்கள் மத்தியில் உதவி செய்யும் மனோபாங்கும் மிக உயர்ந்த நிலையிலே காணப்பட்டதாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் ஜே.ஜே.கெனடி தெரிவித்துள்ளார்.

உலக செஞ்சிலுவை தினமான இன்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

தற்போது இலங்கையில் நகரமயமாக்கம், உலகமயமாக்கம் என்பவற்றை அடிப்படையாக கொண்ட துரித வளர்ச்சியின் காரணமாக பொருளாதார நெருக்கடிகளையும் மேலும் பல சவால்களையும் இன்றைய சமூகம் சந்திக்க வேண்டியுள்ளது.

உதவி செய்யும் மனோபாங்கு அரிதாகிக் கொண்டு போவது கவலைக்குரிய விடயமாகும்.

எனவே இன்றைய சமூக கலாச்சார மாற்றங்களுக்கேற்ப நாமும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய சமூகப் பொறுப்பு செஞ்சிலுவைச் சங்க அங்கத்தவர்களாகிய எம் அனைவருக்கும் காணப்படுகின்றது.

இந்த வகையில் சமூகத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முகவர்களாகிய எமது மக்களின் குறிப்பாக இளைஞர்களின் ஆளுமை, தலைமைத்துவம், உதவும் மனோபாங்கு, ஒழுக்கம் என்பவற்றை விருத்தி செய்து வளமிக்கதோர் இளைஞர் சமுதாயத்தை உருவாக்கி எதிர்கால சவால்களை இலகுவாக வெற்றிப் பெறச் செய்ய வேண்டும். இன்னல்களில் வாடும் சமூக மக்களின் துயர் துடைக்க செஞ்சிலுவையின் தொண்டராக முன்வரச் செய்வதே எமது நோக்காகும்.

மனிதாபிமான சிந்தனையுடன் வரும் அனைவருக்கும் எமது செஞ்சிலுவைச் சங்கத்தின் கதவுகள் எந்நேரமும் திறந்திருப்பதோடு சமுதாயத்தினை வலுப்படுத்துவதன் மூலம் சமூக அபிவிருத்தியை ஏற்படுத்தும் இப்பாரிய சமூகப் பொறுப்பில் என்னுடன் கரம் சேர்க்கும்படி இந்த நன்நாளில் உங்கள் அனைவரையும் கேட்டுநிற்கின்றேன் எனவும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் ஜே.ஜே.கெனடி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like