காரை ஏற்றி ஆசிரியை கொலை: காதல் தகராறில் தீயணைப்பு வீரர் ஆத்திரம்

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் காரை ஏற்றி ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீயணைப்புப் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் 45 வயதான நிவேதா. கணவரை பிரிந்து வாழும் இவர், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியில் தீயணைப்புப் படையில் வேலைபார்க்கும் 30 வயதான இளையராஜா என்பவருக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நிவேதாவுக்கு பேஸ்புக் மூலம் சென்னை கொளத்தூர் வஜ்ரவேல் நகரைச் சேர்ந்த கணபதி(33) என்பவரது நட்பு கிடைத்தது. இருவரும் பேஸ்புக் மூலம் பேசி நட்பை வளர்த்துக் கொண்டனர். கணபதியுடனான நட்பால் காதலர் இளையராஜாவை மறக்கும் அளவுக்கு சென்று விட்டார்.

நிவேதாவின் பேஸ்புக் காதலர் விவகாரம் இளையராஜாவுக்கு தெரிய வந்ததும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பேஸ்புக் காதலரை கைவிடுமாறு எச்சரித்தார் என்றாலும் நிவேதா தொடர்ந்து கணபதியுடன் பேஸ்புக்கில் நட்பில் இருந்தார்.

இந்த நிலையில் இருவரும் சென்னைக்கு வந்துள்ளனர். ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த நிவேதா திங்கள்கிழமை மாலை வெளியே செல்வதாக கூறி சென்றுள்ளார்.

அதே நேரத்தில் இளையராஜாவும் வெளியே சென்றுள்ளார். இதனிடையே சென்னை அண்ணாநகரில் ஆண் நண்பர் ஒருவருடன் நிவேதா இருசக்கரவாகனத்தில் சென்றதை பார்க்க நேர்ந்த இளையராஜா உடனடியாக அவர்களை காரில் விரட்டியதாக கூறப்படுகிறது.

அண்ணா நகர் 3-வது அவென்யூ அருகே சென்றபோது காரை வேகமாக கொண்டு சென்று அந்த இருசக்கரவாகனத்தில் மோதியதாக இளையராஜா பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த நிவேதா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஆசிரியை நிவேதா. இதனையடுத்து விபத்துக்கு காரணமான இளையராஜாவை கைது செய்த பொலிசார் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like