உயிர் மூச்சான இரணைதீவு மண்ணை மீட்கும் வரை போராட்டம் ஓயாது

உயிர் மூச்சான இரணைதீவு மண்ணை மீட்கும் வரை போராட்டம் ஓயாது என்று தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரணைதீவு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாக்கு நீரிணையை கண்காணிக்கும் பாரிய ராடார் தளங்களை நிறுவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கையை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

கடற்படையினரால் கபளீகரம் செய்யப்பட்டுள்ள, கடல்வளத்துடன் கூடிய காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இரணைதீவு பிரதேச மக்கள் இராணுவ முகாமுக்கு முன்னால் இன்றையதினமும் 10 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தனித்தீவில் சுதந்திரமாக வசித்து வந்த மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கியுள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் தமது உயிர் போனாலும் பாரம்பரியமாக தொழில் செய்துவந்த பூர்வீக நிலத்தை கடற்படையிருக்கோ அல்லது வேறு எந்தத் தேவைகளுக்கோ விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தீர்க்கமாக தெரிவித்துள்ளனர்.

You might also like