வல்வை அம்மன் தீர்த்தத் திருவிழா, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய மற்றும் இறுதித் திருவிழாவான தீர்த்தத் திருவிழாவில் இன்று காலை நிறைவு பெற்றுள்ளது. இன்றைய இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதிகாலை இடம்பெற்ற யாகாங்குர விசர்ச்சனம் மற்றும் சூர்ணோற்சவத்தினத் தொடர்ந்து, அம்பாள் காலை 0830 மணியளவில் ஊறணி தீர்த்தக் கடற்கரையைச் சென்றடைந்திருந்தார்.
ஊரணி தீர்த்தக்கடற்கரையில் தீர்த்த உற்சவ நிகழ்வு சுமார் 1030 மணி வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஊரணி தீர்த்த மண்டபத்தில் நடைபெற்ற பூஜைகளைத் தொடர்ந்து அம்பாள் நெடியக்காட்டு திருச்சிற்றம்பல பிள்ளையார் ஆலயம் நோக்கி திரும்பியுள்ளார்.
ஏராளமான அடியார்கள் தீர்த்தமாடியதுடன் பல படகுகளும் கடலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நிகழ்வைச் சிறப்பிக்கும் வண்ணம் புகை கூடுகள் வானில் ஏவப்பட்டன.
இன்று மாலை இடம்பெறவுள்ள இந்திரவிழாவைச் சிறப்பிக்கும் வண்ணம் வல்வை பிரதேசத்தின் பருத்தித்துறை – காங்கேசந்துறை விதியின் பெரும்பாலான பகுதிகளில் வாழை மரங்கள், வண்ண மின்குமிழ்கள், மற்றும் பாரிய உருவப் படங்கள் (Cut outs) அமைக்கப்பட்டுள்ளன.