விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அபாரமான பரிசு அறிவிப்பு
சுவிட்சர்லாந்து நாட்டில் உடல்நலம் காரணமாக விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்களுக்கு அபாரமான பரிசு வழங்கப்படும் என பிரபல ஹொட்டல் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
சுவிஸில் மிகவும் பிரபலமான Remimag என்ற ஹொட்டல் நிறுவனத்தின் கிளைகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இக்கிளைகளில் சுமார் 400 ஊழியர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களின் நலனிற்காக ஹொட்டல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், எவ்வித நோய் காரணமாக தொடர்ந்து 6 மாதங்களுக்கு விடுமுறை எடுக்காமல் பணிக்கு வரும் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 200 பிராங்க் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
எவ்வித நோய் இன்றி ஊழியர்கள் பணியாற்றினால் வாடிக்கையாளர்களின் நலனும் பாதுகாக்கப்படும்.
மேலும், நோய் இல்லாத ஊழியர்கள் மிகவும் தரமான சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
விடுமுறை எடுக்காத ஊழியர்களுக்கு 200 பிராங்க் பரிசு மட்டுமின்றி பிற சலுகைகளும் வழங்கப்படும் என Remimag ஹொட்டல் நிறுவனம் அறிவித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.