வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் வீட்டுத் திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை

வவுனியா சமணங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒருபகுதி மயிலங்குளம் கிராமசேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை வீடமைப்பு அதிகாரசபை மேற்கொண்டதாக இன்றைய தினம் ஆச்சிபுரம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது.

இதன் காரணமாக வீட்டுத் திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், பதற்றமான சூழ்நிலை நிலவியதுடன், அபிவிருத்தி உத்தியோகத்தருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்து மக்கள், நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில் 365 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், ஆச்சிபுரம் கிராமத்திலுள்ள மக்களுக்கு வவுனியா பிரதேச செயலத்தினூடாகவே காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டது.

வீடமைப்பு அதிகார சபையினூடாக 2017 ஆம் ஆண்டு 136 வீடுகள் ஆச்சிபுரம் கிராமத்திற்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அருள்குமார், ஆச்சிபுரம் கிராமம் வீடமைப்பு அதிகார சபையினால் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி மயிங்குளம் கிராம சேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இப்பிரச்சனை தொடர்பாக கருத்து தெரிவித்த ஆச்சிபுரம் கிராமத்திற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருள்குமார், வீடமைப்பு அதிகார சபையின் அறிவுறுத்தலுக்கு அமைவாகவே ஆச்சிபுரம் கிராம மக்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

குறித்த கிராமத்தை இரண்டாக பிரித்துள்ள போதிலும் வீடில்லாத பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் வீடுகள் எதிர்காலத்தில் வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

தனியாக பிரிக்கப்பட்டுள்ள கிராம மக்களுக்கு உடனடியாக 50 வீடுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆச்சிபுரம் கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில், 136 வீடுகள் தமது கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ள விடயம் நேற்று மாலையில் அறிவிக்கப்பட்டது.

அத்துடன், எமது கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எல்லைக் கிராமத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்கு இவ்வாறான நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், இவ்வாறு கிராமத்தை திடீரென இரண்டாக பிரிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அத்துடன் சிங்கள கிராமமான மயிலங்குளத்துடன் ஆச்சிபுரக் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசியம் பேசும் அரசியல்வாதிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தமக்கு வேதனையளிப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

You might also like