யாழ். குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகளில் திடீர் உயர்வு

யாழ். குடாநாட்டில் கடந்த மூன்று நாட்களாக மரக்கறிகளின் விலைகளில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன்படி யாழ். குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலிப் பொதுச் சந்தையில் இன்று(11) மரக்கறிகளின் விலை நிலவரப்பட்டி,

முன்னர் 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முருங்கைக்காய் தற்போது 300 ரூபாவாகவும், 140 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பாகற்காய் 240 ரூபாவாகவும், 80 ரூபா முதல் 90 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட பயிற்றங்காய் 160 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது.

அதேப்போல் 100 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட தக்காளி 140 ரூபாவாகவும், 90 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் 140 ரூபாவாகவும், 180 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட கறிமிளகாய் 240 ரூபாவாகவும், 120 ரூபா முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட கரட் 220 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட வெண்டிக்காய் 120 ரூபாவாகவும், 70 ரூபா முதல் 80 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட பீற்றூட் 100 ரூபாவாகவும், 140ரூபா முதல் 160 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் 200 ரூபாவாகவும், 100 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் 160 ரூபாவாகவும், 70 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட கருணைக் கிழங்கு 80 ரூபா முதல் 90 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் ஒரு கிலோ லீக்ஸ் முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலையான 100 ரூபாவுக்கும், அதேபோன்று பம்பாய் வெங்காயமும் முன்னைய விலையான 100 ரூபாவுக்கே விற்பனை செய்யப்படுகின்றன.

ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலையும் முன்னைய விலையான 110 ரூபாவுக்கே விற்பனையாகின்றது. அத்துடன் ஒரு பிடி கீரை 40 ரூபா முதல் 50 ரூபா வரை விற்பனையாகின்றது.

யாழ்.குடாநாட்டில் தற்போது நிலவும் கடும் வரட்சியான காலநிலையும், நேற்றைய தினம் இடம்பெற்ற சித்திரைப் பெளர்ணமி விரதம் மற்றும் ஆலய மஹோற்சவங்கள் போன்றனவும் மரக்கறிகளின் திடீர் விலை உயர்விற்குக் காரணமென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வெசாக் தினத்திற்கு மறுதினமான இன்றைய தினம் தென்னிலங்கையின் முக்கிய சந்தையான தம்புள்ளைச் சந்தையிலிருந்து வழமையாகப் பாரவூர்திகளில் குடாநாட்டிற்கு எடுத்துவரப்படும் பெருமளவு மரக்கறி வகைகள் எடுத்துவரப்படவில்லை.

இதனால் குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் வரவு இன்று வழமையைவிட குறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like